*1
பரவும் பரிசு ஒன்று அறியேன்நான் பண்டே உம்மைப் பயிலாதேன்;
இரவும் பகலும் நினைந்தாலும் எய்த நினையமாட்டேன், நான்---
கரவு இல் அருவி கமுகு உண்ண, தெங்குஅம்குலைக்கீழ்க் கருப்பாலை
அரவம் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ!

*2
எங்கே போவேன்ஆயிடினும், அங்கே வந்து என் மனத்தீராய்,
சங்கை ஒன்றும் இன்றியே தலைநாள் கடைநாள் ஒக்கவே;---
கங்கை சடைமேல் கரந்தானே! கலைமான்மறியும் கனல்மழுவும்
தங்கும், திரைக் காவிரிக் கோட்டத்து, ஐயாறு உடைய அடிகளோ!

*3
மருவிப் பிரியமாட்டேன், நான்; வழிநின்றொழிந்தேன்; ஒழிகிலேன்---
பருவி விச்சி(ய) மலைச்சாரல் பட்டைகொண்டு பகடுஆடி,
குருவி ஓப்பி, கிளி கடிவார் குழல்மேல் மாலை கொண்டு ஒட்டந்-
தர, அம் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ!

*4
பழகாநின்று பணி செய்வார்,---பெற்ற பயன் ஒன்று அறிகிலேன்,---
இகழாது உமக்கு ஆட்பட்டோர்க்கு; ஏகபடம் ஒன்று அரைச் சாத்தி!
குழகா! வாழை,---குலை,---தெங்கு கொணர்ந்து கரைமேல் எறியவே,
அழகு ஆர் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ!

*5
பிழைத்த பிழை ஒன்று அறியேன், நான்; பிழையைத் தீரப் பணியாயே!---
மழைக் கண் நல்லார் குடைந்துஆட, மலையும் நிலனும் கொள்ளாமை
கதைக் கொள் பிரசம் கலந்து, எங்கும் கழனி மண்டி, கை ஏறி,
அழைக்கும் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ!

*6
கார்க் கொள் கொன்றை சடைமேல் ஒன்று உடையாய்! விடையாய்! நகையினால்
மூர்க்கர் புரம்மூன்று எரிசெய்தாய்! முன் நீ; பின் நீ; முதல்வன் நீ---
வார்க் கொள் அருவி பல வாரி, மணியும் முத்தும் பொன்னும் கொண்டு,
ஆர்க்கும் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ!

*7
மலைக்கண் மடவாள் ஒருபால்ஆய்ப் பற்றி உலகம் பலி தேர்வாய்!
சிலைக் கொள் கணையால் எயில் எய்த செங்கண் விடையாய்! தீர்த்தன் நீ---
மலைக் கொள் அருவி பல வாரி, மணியும் முத்தும் பொன்னும் கொண்டு,
அலைக்கும் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ!

*8
போழும் மதியும், புனக் கொன்றை, புனல், சேர் சென்னிப் புண்ணியா!
சூழும் அரவச் சுடர்ச்சோதீ! உன்னைத் தொழுவார் துயர் போக,
வாழுமவர்கள், அங்குஅங்கே வைத்த சிந்தை உய்த்து ஆட்ட!---
ஆழும் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ!

*9
கதிர்(க்) கொள் பசியே ஒத்தே நான் கண்டேன், உம்மைக் காணுதேன்;
எதிர்த்து நீந்தமாட்டேன், நான்---எய்மான் தம்மான்தம்மானே!
விதிர்த்து மேகம் மழை பொழிய, வெள்ளம் பரந்து, நுரை சிதறி,
அதிர்க்கும் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ!

*10
கூசி அடியார் இருந்தாலும் குணம்ஒன்று இல்லீர்; குறிப்பு இல்லீர்;
தேசவேந்தன்திருமாலும், மலர்மேல் அயனும், காண்கிலார்---
தேசம் எங்கும் தெளித்து ஆடத் தெண்நீர் அருவி கொணர்ந்து எங்கும்
வாசம் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ!

*11
கூடி அடியார் இருந்தாலும் குணம்ஒன்று இல்லீர்; குறிப்பு இல்லீர்;
ஊடி இருந்தும் உணர்கிலேன்,---உம்மை,---தொண்டன், ஊரனேன்,
தேடி எங்கும் காண்கிலேன்; திரு ஆரூரே சிந்திப்பன்---
ஆடும் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ!