*1
கண்டுகொள்ள (அ)ரியானைக் கனிவித்துப்
பண்டு நான் செய்த பாழிமை கேட்டிரேல்,
கொண்ட பாணி கொடுகாட்டி தாளம் கைக்-
கொண்ட தொண்டரைத் துன்னினும் சூழலே!

*2
நடுக்கத்துள்ளும், நகையுளும், நம்பற்குக்
கடுக்கக் கல்லவடம் இடுவார்கட்குக்
கொடுக்கக் கொள்க என உரைப்பார்களை
இடுக்கண் செய்யப்பெறீர், இங்கு நீங்குமே!

*3
கார் கொள் கொன்றைக் கடிமலர்க்கண்ணியான்
சீர் கொள் நாமம் சிவன் என்று அரற்றுவார்
ஆர்கள்ஆகினும் ஆக; அவர்களை
நீர்கள் சாரப்பெறீர், இங்கு நீங்குமே!

*4
சாற்றினேன்: சடை நீள் முடிச் சங்கரன்,
சீற்றம் காமன்கண் வைத்தவன், சேவடி
ஆற்றவும் களிப்பட்ட மனத்தராய்,
போற்றி! என்று உரைப்பார் புடை போகலே!

*5
இறை என் சொல் மறவேல், நமன்தூதுவீர்!
பிறையும் பாம்பும் உடைப் பெருமான் தமர்,
நறவம் நாறிய நன்நறுஞ் சாந்திலும்
நிறைய நீறு அணிவார், எதிர் செல்லலே!

*6
வாமதேவன் வள நகர் வைகலும்,
காமம் ஒன்று இலராய், கை விளக்கொடு,
தாமம், தூபமும், தண்நறுஞ்சாந்தமும்,
ஏமமும், புனைவார் எதிர் செல்லலே!

*7
படையும் பாசமும் பற்றிய கையினீர்!
அடையன்மின், நமது ஈசன் அடியரை!
விடை கொள் ஊர்தியினான் அடியார்குழாம்
புடை புகாது, நீர், போற்றியே போமினே!

*8
விச்சை ஆவதும், வேட்கைமை ஆவதும்,
நிச்சல் நீறு அணிவாரை நினைப்பதே;
அச்சம் எய்தி அருகு அணையாது, நீர்,
பிச்சை புக்கவன் அன்பரைப் பேணுமே!

*9
இன்னம் கேண்மின்; இளம்பிறை சூடிய
மன்னன் பாதம் மனத்துஉடன் ஏத்துவார்,
மன்னும் அஞ்சுஎழுத்து ஆகிய மந்திரம்-
தன்னில் ஒன்று வல்லாரையும் சாரலே!

*10
மற்றும் கேண்மின்; மனப் பரிப்பு ஒன்று இன்றிச்
சுற்றும் பூசிய நீற்றொடு, கோவணம்,
ஒற்றை ஏறு, உடையான் அடியேஅலால்
பற்றுஒன்றுஇ(ல்)லிகள்மேல் படைபோகலே!

*11
அரக்கன் ஈர்-ஐந்தலையும் ஓர்தாளினால்
நெருக்கி ஊன்றியிட்டான் தமர் நிற்கிலும்,
சுருக்கெனாது, அங்குப் பேர்மின்கள்! மற்று நீர்
சுருக்கெனில், சுடரான் கழல் சூடுமே.