*1
கற்றாங்கு எரி ஓம்பி, கலியை வாராமே
செற்றார் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய
முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா, பாவமே.

*2
பறப்பைப் படுத்து, எங்கும் பசு வேட்டு, எரி ஓம்பும்
சிறப்பர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய
பிறப்புஇல்பெருமானை, பின் தாழ்சடையானை,
மறப்புஇலார்கண்டீர், மையல் தீர்வாரே.

*3
மை ஆர் ஒண்கண்ணார் மாடம் நெடுவீதிக்
கையால் பந்து ஓச்சும் கழி சூழ் தில்லையுள்,
பொய்யா மறை பாடல் புரிந்தான், உலகு ஏத்தச்
செய்யான், உறை கோயில் சிற்றம்பலம்தானே.

*4
நிறை வெண்கொடி மாட நெற்றி நேர் தீண்டப்
பிறை வந்து இறை தாக்கும் பேரம்பலம், தில்லைச்
சிறைவண்டு அறை ஓவாச் சிற்றம்பலம், மேய
இறைவன் கழல் ஏத்தும் இன்பம் இன்பமே.

*5
செல்வ நெடுமாடம் சென்று சேண் ஓங்கிச்
செல்வ மதி தோய, செல்வம் உயர்கின்ற,
செல்வர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய
செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே.

*6
வரு மாந்தளிர்மேனி மாது ஓர்பாகம் ஆம்
திரு மாந் தில்லையுள், சிற்றம்பலம் மேய
கருமான்உரி-ஆடைக் கறை சேர் கண்டத்து எம்
பெருமான் கழல்அல்லால் பேணாது, உள்ளமே.

*7
அலை ஆர் புனல் சூடி, ஆகத்து ஒருபாகம்
மலையான்மகளோடும் மகிழ்ந்தான், உலகு ஏத்தச்
சிலையால் எயில் எய்தான், சிற்றம்பலம்தன்னைத்
தலையால் வணங்குவார் தலைஆனார்களே.

*8
கூர்வாள் அரக்கன்தன் வலியைக் குறைவித்து,
சீராலே மல்கு சிற்றம்பலம் மேய
நீர் ஆர் சடையானை நித்தல் ஏத்துவார்
தீரா நோய்எல்லாம் தீர்தல் திண்ணமே.

*9
கோள் நாக(அ)ணையானும் குளிர்தாமரையானும்
காணார் கழல் ஏத்த, கனல்ஆய் ஓங்கினான்,
சேணார் வாழ் தில்லைச் சிற்றம்பலம் ஏத்த,
மாணா நோய்எல்லாம் வாளா மாயுமே.

*10
பட்டைத் துவர்ஆடை, படிமம், கொண்டாடும்
முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே,
சிட்டர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய
நட்டப்பெருமானை நாளும் தொழுவோமே.

*11
ஞாலத்து உயர் காழி ஞானசம்பந்தன்
சீலத்தார் கொள்கைச் சிற்றம்பலம் மேய
சூலப்படையானைச் சொன்ன தமிழ்மாலை
கோலத்தால் பாட வல்லார் நல்லாரே.