*1
தோடு உடைய செவியன், விடை ஏறி, ஓர் தூ வெண்மதி சூடி,
காடு உடைய சுடலைப் பொடி பூசி, என் உள்ளம் கவர் கள்வன்---
ஏடு உடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த, அருள்செய்த,
பீடு உடைய பிரமாபுரம் மேவிய பெம்மான்---இவன் அன்றே!

*2
முற்றல்ஆமை இள நாகமொடு ஏனமுளைக்கொம்பு அவை பூண்டு,
வற்றல்ஓடு கலனாப் பலி தேர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்---
கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால்---தொழுது ஏத்த,
பெற்றம் ஊர்ந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்---இவன் அன்றே!

*3
நீர் பரந்த நிமிர்புன்சடைமேல் ஒர் நிலாவெண்மதி சூடி,
ஊர் பரந்த இனவெள்வளை சோர, என் உள்ளம் கவர் கள்வன்---
ஊன் பரந்த உலகின் முதல்ஆகிய ஓர் ஊர் இது என்னப்
பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான்---இவன் அன்றே!

*4
விண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி, விளங்கு தலைஓட்டில்
உள் மகிழ்ந்து, பலி தேரிய வந்து, எனது உள்ளம் கவர் கள்வன்---
மண் மகிழ்ந்த அரவம், மலர்க்கொன்றை, மலிந்த வரைமார்பில்
பெண் மகிழ்ந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்---இவன் அன்றே!

*5
ஒருமை பெண்மை உடையன்! சடையன்! விடை ஊரும்(ம்)இவன்! என்ன
அருமைஆக உரைசெய்ய அமர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்---
கருமை பெற்ற கடல் கொள்ள, மிதந்தது ஒர் காலம்(ம்) இது என்னப்
பெருமை பெற்ற பிரமாபுரம் மேவிய பெம்மான்---இவன் அன்றே!

*6
மறை கலந்த ஒலிபாடலொடு ஆடலர்ஆகி, மழு ஏந்தி,
இறை கலந்த இனவெள்வளை சோர, என் உள்ளம் கவர் கள்வன்---
கறை கலந்த கடி ஆர் பொழில், நீடுஉயர்சோலை, கதிர் சிந்தப்
பிறை கலந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்---இவன் அன்றே!

*7
சடை முயங்கு புனலன்(ன்), அனலன்(ன்), எரி வீசிச் சதிர்வு எய்த,
உடை முயங்கும் அரவோடு உழிதந்து, எனது உள்ளம் கவர் கள்வன்---
கடல் முயங்கு கழி சூழ் குளிர்கானல் அம் பொன் அம் சிறகு அன்னம்
பெடை முயங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!

*8
வியர் இலங்கு வரை உந்திய தோள்களை வீரம் விளைவித்த
உர் இலங்கை அரையன் வலி செற்று, எனது உள்ளம் கவர் கள்வன்---
துயர் இலங்கும்(ம்) உலகில் பலஊழிகள் தோன்றும்பொழுதுஎல்லாம்
பெயர் இலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான்---இவன் அன்றே!

*9
தாள் நுதல் செய்து, இறை காணிய, மாலொடு தண்தாமரையானும்,
நீணுதல் செய்து ஒழிய(ந்) நிமிர்ந்தான், எனது உள்ளம் கவர் கள்வன்---
வாள்நுதல் செய் மகளீர் முதல்ஆகிய வையத்தவர் ஏத்த,
பேணுதல்செய் பிரமாபுரம் மேவிய பெம்மான்---இவன் அன்றே!

*10
புத்தரொடு பொறி இல் சமணும் புறம்கூற, நெறி நில்லா
ஒத்த சொல்ல, உலகம் பலி தேர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்---
மத்தயானை மறுக(வ்), உரி போர்த்தது ஒர்மாயம்(ம்)இது! என்ன,
பித்தர்போலும், பிரமாபுரம் மேவிய பெம்மான்---இவன் அன்றே!

*11
அருநெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர் மேய,
பெரு நெறிய, பிரமாபுரம் மேவிய பெம்மான்இவன்தன்னை,
ஒரு நெறிய மனம்வைத்து உணர் ஞானசம்பந்தன்(ன்) உரைசெய்த
திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்த்தல் எளிதுஆமே.