*1
மலை ஆர் அருவித்திரள் மா மணி உந்தி,
குலை ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால்,
கலை ஆர் அல்குல் கன்னியர் ஆடும், துறையூர்த்
தலைவா! உனை வேண்டிக்கொள்வேன், தவநெறியே.

*2
மத்தம்மதயானையின் வெண்மருப்பு உந்தி,
முத்தம் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால்,
பத்தர் பயின்று ஏத்திப் பரவும், துறையூர்
அத்தா! உனை வேண்டிக்கொள்வேன், தவநெறியே.

*3
கந்தம் கமழ் கார் அகில் சந்தனம் உந்திச்
செந்தண்புனல் வந்து இழி பெண்ணை வடபால்,
மந்திபல மா நடம்ஆடும், துறையூர்
எந்தாய்! உனை வேண்டிக்கொள்வேன் தவநெறியே.

*4
அரும்பு ஆர்ந்தன மல்லிகை சண்பகம் சாடி,
சுரும்பு ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால்,
கரும்பு ஆர் மொழிக் கன்னியர் ஆடம், துறையூர்
விரும்பா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே.

*5
பாடு ஆர்ந்தன மாவும் பலாக்களும் சாடி,
நாடு ஆர வந்து எற்றி, ஒர் பெண்ணை வடபால்,
மாடு ஆர்ந்தன மாளிகை சூழும், துறையூர்
வேடா! உனை வேண்டிக்கொள்வேன், தவநெறியே.

*6
மட்டு ஆர் மலர்க்கொன்றையும் வன்னியும் சாடி,
மொட்டு ஆரக் கொணர்ந்து எற்றி,ஓர் பெண்ணை வடபால்,
கொட்டு ஆட்டொடு பாட்டுஒலி ஓவா, துறையூர்ச்
சிட்டா! உனை வேண்டிக்கொள்வேன், தவநெறியே.

*7
மாது ஆர் மயில்பீலியும் வெண்நுரை உந்தி,
தாது ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால்,
பொது ஆரந்தன பொய்கைகள் சூழும், துறையூர்
நாதா! உனை வேண்டிக்கொள்வேன், தவநெறியே.

*8
கொய்யா மலர்க்கோங்கொடு வேங்கையும் சாடி,
செய் ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால்,
மை ஆர் தடங்கண்ணியர் ஆடும், துறையூர்
ஐயா! உனை வேண்டிக்கொள்வேன், தவநெறியே.

*9
விண் ஆர்ந்தன மேகங்கள் நின்று பொழிய,
மண் ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால்,
பண் ஆர் மொழிப் பாவையர் ஆடும், துறையூர்
அண்ணா! உனை வேண்டிக்கொள்வேன், தவநெறியே.

*10
மா வாய் பிளந்தானும், மலர்மிசையானும்,
ஆவா! அவர் தேடித் திரிந்து அலமந்தார்;
பூ ஆர்ந்தன பொய்கைகள் சூழும் துறையூர்த்
தேவா! உனை வேண்டிக்கொள்வேன், தவநெறியே.

*11
செய் ஆர் கமலம் மலர் நாவலூர் மன்னன்,-
கையால்-தொழுது ஏத்தப்படும் துறையூர்மேல்-
பொய்யாத் தமிழ் ஊரன், உரைத்தன வல்லார்,
மெய்யே பெறுவார்கள், தவநெறிதானே.