*1
வெங் கள் விம்மு குழல் இளையர் ஆட(வ்) வெறி விரவு நீர்ப்
பொங்கு செங்கண் கருங்கயல்கள் பாயும் புகலூர்தனுள்---
திங்கள் சூடி, திரிபுரம் ஒர் அம்பால் எரியூட்டிய---
எங்கள் பெம்மான் அடி பரவ, நாளும்(ம்), இடர் கழியுமே.

*2
வாழ்ந்த நாளும்(ம்), இனி வாழும் நாளும்(ம்), இவை அறிதிரேல்,
வீழ்ந்த நாள் எம்பெருமானை ஏத்தா விதிஇ(ல்)லிகாள்!
போழ்ந்த திங்கள் புரிசடையினான்தன் புகலூரையே
சூழ்ந்த உள்ளம் உடையீர்காள்! உங்கள் துயர் தீருமே.

*3
மடையில் நெய்தல், கருங்குவளை, செய்ய(ம்)மலர்த்தாமரை,
புடை கொள் செந்நெல் விளை கழனி மல்கும் புகலூர்தனுள்,
தொடை கொள் கொன்றை புனைந்தான்,---ஒர் பாகம்,---மதிசூடியை
அடைய வல்லார் அமருலகம் ஆளப்பெறுவார்களே.

*4
பூவும் நீரும் பலியும் சுமந்து, புகலூரையே
நாவினாலே நவின்று ஏத்தல் ஓவார்; செவித்துளைகளால்
யாவும் கேளார், அவன் பெருமைஅல்லால், அடியார்கள்தாம்,
ஓவும் நாளும் உணர்வு ஒழிந்த நாள் என்று உளம் கொள்ளவே.

*5
அன்னம் கன்னிப்பெடை புல்கி, ஒல்கி அணி நடையவாய்,
பொன் அம்காஞ்சி மலர்ச்சின்னம் ஆலும் புகலூர்தனுள்,
முன்னம் மூன்றுமதில் எரித்த மூர்த்தி திறம் கருதுங்கால்,
இன்னர் என்னப் பெரிது அரியர்; ஏத்தச் சிறிது எளியரே.

*6
குலவர் ஆக; குலம்இலரும் ஆக; குணம் புகழுங்கால்,
உலகில் நல்ல கதி பெறுவரேனும், மலர் ஊறு தேன்
புலவம்எல்லாம் வெறி கமழும் அம் தண் புகலூர்தனுள்,
நிலவம் மல்கு சடை அடிகள் பாதம் நினைவார்களே.

*7
ஆணும் பெண்ணும்(ம்) என நிற்பரேனும்(ம்), அரவு ஆரமாப்
பூணுமேனும், புகலூர்தனக்கு ஓர் பொருள் ஆயினான்;
ஊணும் ஊரார் இடு பிச்சை ஏற்று உண்டு, உடைகோவணம்
பேணுமேனும், பிரான் என்பரால், எம்பெருமானையே.

*8
உய்ய வேண்டில்(ல்) எழு, போத! நெஞ்சே! உயர் இலங்கைக் கோன்
கைகள் ஒல்கக் கருவரை எடுத்தானை ஒர்விரலினால்
செய்கை தோன்றச் சிதைத்து அருள வல்ல சிவன் மேய, பூம்
பொய்கை சூழ்ந்த, புகலூர் புகழ, பொருள் ஆகுமே.

*9
`நேமியானும், முகம்நான்கு உடைய(ந்) நெறி அண்ணலும்,
ஆம் இது என்று தகைந்து ஏத்தப் போய், ஆர்அழல் ஆயினான்;
சாமிதாதை; சரண் ஆகும்' என்று, தலைசாய்மினோ---
பூமிஎல்லாம் புகழ் செல்வம் மல்கும் புகலூரையே!

*10
வேர்த்த மெய்யர் உருமத்து உடைவிட்டு உழல்வார்களும்,
போர்த்த கூறைப் போதி நீழலாரும்,---புகலூர்தனுள்
தீர்த்தம்எல்லாம் சடைக் கரந்த தேவன் திறம் கருதுங்கால்---
ஓர்த்து, மெய் என்று உணராது, பாதம் தொழுது உய்ம்மினே!

*11
புந்தி ஆர்ந்த பெரியோர்கள் ஏத்தும் புகலூர்தனுள்,
வெந்தசாம்பல்பொடிப் பூச வல்ல விடைஊர்தியை,
அந்தம் இல்லா அனல்ஆடலானை, அணி ஞானசம்-
பந்தன் சொன்ன தமிழ் பாடி ஆட, கெடும், பாவமே.